Thursday, April 21, 2011

குழந்தை தொழிலாளி

குழந்தை தொழிலாளி



சில நாட்களுக்கு முன் ஒரு கோவிலுக்கு சென்றிருந்தேன்.அங்கே கழிப்பறையில் 10 வயது மதிக்கதக்க ஒரு சிறுமி கழிப்பறையை சுத்தம் செய்வதை கண்டேன். பெயர் என்ன என்றேன்? சுமதி என்றாள்.எவ்வளவு தருவார்கள் என்றேன்? 2 அல்லது 3 ரூபாய் என்றாள். எனக்கு என்ன செய்வது, அந்த பெண்ணிடம் என்ன சொல்லுவது ஒன்றுமே புரியவில்லை. பையில் இருந்தா 50 ரூபாயை கொடுத்தேன் முதலில் மறுத்தாள் பிறகு வாங்கிகொண்டாள்.

அன்று முழுவதும் எனக்கு அந்த சிறுமியின் முகமே மனதில் நிலழாடியது. அந்த சிறுமிக்கு என்னால் வேறு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. 2 ரூபாய்கு சிறுமியை வேலைக்கு அனுப்பினால்,அந்த குடும்பத்தின் நிலை தான் என்ன? ”குழந்தை தொழிலாளர் ஒழிப்பு” என்பன திட்டங்களாகவே உள்ளன.

இதே போல் என் தோழியின் உறவினர் வீட்டில் கடை வைத்து உள்ளனர்.கோடை விடுமுறைகளில்அவர்கள் கடைக்கு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவராம். கொலுத்தும் வெயிலில் பெறியவர்கள்வேலை செய்வதே கடினம். சிறுவர் என்றால் நினைகவே முடியவில்லை. இப்படி பல இடங்களில் சிறுவர்,சிறுமியர் வேலைக்கு நிறுத்தபட்டே உள்ளானர். கண்முன்னே தெரிவது மிக மிக குறைந்த அளவே.




இதில் ஒரு புறம் மட்டுமே நாம் பார்க்கிறோம். கோடை காலத்தில் வேலை செய்யும் ஒரு பையனிடம் “ஏன் வேலை செய்கிறாய்?” என கேட்ட போது ஜூன் மாதம் புக் வாங்க, புது யுனிபாம் வாங்க காசு வேண்டாமா அக்கா? என்று கேட்ட போது என்னிடம் பதில் இல்லை. சில சிறுவர் சிறுமியர் விரும்பியேவேலைக்கு செல்கின்றனர்.

என் பக்கத்து வீட்டு வேலுவின் அம்மாவிடம் உங்க பையன் படிப்பு செலவு முழுவதும் என் பொறுப்பு என்றாராம். அதற்கு அந்த அம்மா என் அம்மாவிடம் ”ஸ்கூலுக்கு போனா வயத்தால போகுது டீச்சர்” என்று சொன்னாராம். அந்த பையனுக்கு இப்போழுது 15 வயது இருக்கும் ஆனால் அவன் செல்போன் பயன்படுத்துவதை நேற்றுதான் பார்த்தேன், ஆச்சர்யம் என்ன வென்றால் அவர்களின் குடிசை வீட்டை கல் வீடாக மற்ற அவன் தான் பணம் கொடுத்தானாம்.

ஒவ்வொரு குழந்தை தொழிலாளியின் பின்னும் ஒரு கதை உள்ளது. நம் கண் முன்னே காணும் குழந்தை தொழிலாளர்களுக்கு நம்மால் ஆன உதவியை செய்வோம். குழந்தை தொழிலாளர்கள் என்பது கெமிக்கல் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் மட்டும் அல்ல, நம் கண் முன்னே பூ விற்கும் சிறுமியும், பாத்திரம் தேய்க்கும் சிறுமியும் குழந்தை தொழிலாளர்கள் என்பதை உணர மறுக்கிறோம். என்று நம் நாடு தன்னிறைவு அடைகிறதோ அன்றே தான் இந்த கொடுமையை முற்றிலும் ஒழிக்க முடியும். நம்மால் அவர்களின் கண்ணீரை துடைக்க முடியாவிட்டலும் அவர்கள் முகத்தில் சிறு புன்னகையை அரும்ப செய்யலாம்.

Thursday, January 14, 2010

நாணயம்-எனக்கு தெரிந்தது

படம் ரிலீஸ்சாகும் போது இது ’ஒரு வித்யாசமான படம்’ என்று பேட்டி கொடுப்பாங்க. ஆனா அதர பழச இருக்கும்.அந்த விஷயத்தில் இவங்க பொய் சொல்லவில்லை.

இந்த படத்தை பற்றி பேட்டி கொடுக்கும் போது இது பேங்க் திருட்டு பற்றிய படம் என்று எல்லோரும் சொன்னார்கள், 10 நிமிடம் வர சீன்க்கு இவ்வளவு பில்-டப்பானு நினைத்தேன்.
ஆனா படம் முழுவதுமே பேங்க் திருட்டு பத்தி தான்.

பேங்கை கொள்ளை அடிக்க விரும்பும் சிபி, அந்த பேங்கில் வேலை பார்க்கும் மற்றும் அந்த பேங்கின் ”சேப்டி லாக்கரை” உருவாக்கும் பிரசன்னாவை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்.
டெக்னாலஜியுடன் டெக்னிக்கலாக கதை சொல்லி இருகிறார்.

படத்தின் பிண்ணனி இசை சிறப்பாக இருந்தது. படத்தோட பல விஷயங்களை நம்மால் யூகிக்க முடிந்தாலும், படத்தை நன்றாகவே நகர்த்தி கொண்டுபோயிருக்கிறார்கள்.

பிரசன்னா நல்ல நடிகர், அதை சரியாகவே செய்திருக்கிறார். சிபிராஜ்க்கு ஆ............ஊ என கத்தாத வில்லன் ரோல். அதுவே எனக்கு
பெரிய ஆறுதலாய் இருந்தது. அசட்டையான ரோலை அலட்டலாக செய்திருக்கிறார். அவரோட குரல் இந்த படத்துக்கு நல்லாவே பொருந்துகிறது.

பேங்க் திருட்டு பத்தி டெக்னிக்கலா இவ்ளோ ஆழமாக சொல்லி மிரட்டி இருக்கிற இயக்குனர், பிரசன்னாவை மிரட்ட வேற ஏதாவது யோசித்திருக்கலாம்.

பிரசன்னா அடிக்கடி நான் பெரிய அறிவாளினு சொல்கிறார். அவ்ளோ அறிவாளியாக இருக்கிறவர் கிளைமாக்ஸ்ல ‘இங்க என்ன நடக்குது’ என்று கேட்கவேண்டிய அவசியம் இல்லை.
ரம்யாக்கு அவங்க தம்பி மேல பாசம்னு சொல்றாங்க, அதை கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

படத்தில் நிறைய ட்விஸ்டு இருக்கிற மாதிரி கொண்டுபோறாங்க, அதை சுலபமா நாமளே கண்டுபிடித்துவிட முடிகிறது.

ரம்யா கூட பிரசன்னாக்கு கலா மாஸ்டர் சொல்ற கெமிஸ்டிரி ஒர்க் ஆகவில்லை. லேசர் பீம்கு நடுவில் ரம்யா போகிற மாதிரி ஒரு சீன் வரும், ரம்யா நல்லா தான் செய்றாங்க.ஆனால் ஏதோ மிஸ் ஆகிற மாதிரி இருந்தது.


கதையில் சில பல ஒட்டைகள் இருந்தாலும். படம் நல்லாவே வந்திருக்கிறது. இதுவே என் முதல் விமர்சனம் தவறு இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கிறேன்.

Wednesday, November 18, 2009

பயணங்கள்

பயணங்களில் எவ்வளவு சுவராசியமான அனுபவம் இருக்குமோ அவ்வளவு சிரமங்களும் இருக்கத்தான் செய்கிறது. வருடத்திற்கு முந்நூறு நாட்கள் பயணம் செய்ய சொன்னாலும் சந்தோஷமாக தலையசைபேன்,பயணத்தின் அலுப்பு சில மணி நேர தூக்கத்தில் காணாமல் போய்விடும்

பேருந்து பயணத்தில் அரசு விரைவு பேருந்துகளில் உற்சாகமாக சென்னைக்கு பயணித்திருக்கிறேன்.பேருந்தினுள் ஜன்னல் சாத்த முடியாமல் குளிரிலும்,மழையிலும் துவண்டுருக்கிறேன்.மழை சாரலாக பெய்யும் வரை தான் பயணிக்கும் போது இனிமை.

பயணங்கள் கூட வாழ்க்கையின் பல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது.சக பயணிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனையோடு பயணிப்பதை உணர முடியும்.பயணிப்பதே சிலருக்கு வாழ்க்கை ,சிலருக்கு அது பொழுதுபோக்கு.

தீபாவளி, பொங்கல் பயணங்களை தென் தமிழகத்து மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. மூன்று மடங்கு கட்டணம் கொடுத்தும் பொங்கல் அன்று இரவு ஊருக்கு வர நேர்ந்ததுண்டு.அதிகாலை நான்கு மணிக்கு பயணம் என்றால் குளிக்காமல் பயணம். ஏழு மணிக்கு குளித்து புத்துணர்ச்சியான பயணம்.

அப்படியொரு காலை பயணத்தில் ஆங்கில நாளிதழ் படித்துகொண்டு இருந்தேன். பக்கத்து பயணி தமிழ் தினமலர் நாளிதள் வாசித்துக்கொண்டிருந்தார். அது ஒரு ஐபில் சீஸன் என்பதால் வண்ண படங்கள் பார்க்க தமிழ் நாளிதழ் கேட்டேன்.அவர் மடக்கி வைத்து கொண்டார். கொடுக்க மனமில்லை என்று அமைதியாக இருந்தேன். அவர் தீடீரென்று 'கசங்கி விடும்' என்றார். ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று விட்டு விட்டேன். சிறிது நேரத்தில் கண்டக்டர் அவரிடம் ஒரு பேப்பரை படித்து விட்டு கொடுத்தார்.

இந்த பேப்பர் கசங்காது என்று உங்களுக்கு தெரியும என்றேன். நீங்கள் உங்கள் hindu பேப்பரை கொடுப்பீர்களோ! என்றார். கண்டிப்பாக "படிக்கிறீர்களா?" என்றேன்.

பின்பு சிறிது நேரம் கழித்து நாளிதளை எடுத்து தந்தார், நான் வாங்கவில்லை பேப்பரை ஜன்னலுக்கு வெளியே நீட்டி நீங்கள் படிக்கவில்லை..,வெளியே எறிந்து விடுவேன் என்றார் நானும் சளைகாமல் தங்கள் பேப்பரை தாங்கள் எங்கு வேண்டுமனாலும் எறியலாம் ஆனால் நான் படிக்க மாட்டேன் என்றேன்.
அவர் பேப்பரை மடித்து வைத்து கொண்டு ஏதோ முணுமுணுத்தார் அவர் நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்றுவிட்டார். எத்தனையோ வித்தியசமான மனிதர்களை பார்க்கலாம் நாமும் வித்தியசமான மனிதராய் பலர் கண்ணுக்கு தெரிந்திருக்கலாம்.பயணங்கள் தொடரும்.

Thursday, October 15, 2009

கண்டதும் காதல்

கண்டதும் காதலில் நம்பிக்கை
கொண்டவன் நான்

காதலுக்கான அறிகுறி ஏதுமில்லை
உன்னை மணவறையில் பார்த்தபோது
எதிர்காலம் இருட்டாய் மனதில் எங்கோ
ஒளிந்து கொண்டது

பட்டாடை சரசரக்க, சிரிப்பொலி கலகலக்க
மென்உரசல்களுடன் மனதில் பதிய வேண்டிய
சடங்குகள் என் உதறல்களில்
கடந்து போயின.

என் முகம் பார்த்து மனமறிந்த தாய்
”காலம் பதில் சொல்லும்” என்றாள்.
ஆம், பதில் சொல்லியது

முதலில் ஈர்த்தது உன் கொலுசொலி
மூன்று முத்துகளை வைத்துக் கொண்டு
சீரான நடையில் தாளங்கள் இசைத்து
மனதை வருடினாய்.

மனதின் குறிப்பறிந்து செய்யும் செயலால்
கொஞ்சம் கொஞ்சமாய் மனதை கொள்ளை
கொண்டாய் பெண்ணே.....

உன் தலைஅசைவிற்கு காதணி
ஆடும் நடனத்தில் நீ
என்னை ஆட்டுவித்தாய்

உன் மிரண்ட விழிகளில்
உன் மலர்ந்த புன்னகையில்
நீ முணுமுணுக்கும் இசையில்
நீ செய்யும் சமையல் சாகசங்களில்
உன் வெண்டைகாய் விரலில்
உன் நெற்றி சுருள் கேசத்தில்
இப்படி சொல்லிகொண்டே போகலாம்
இந்த நீண்ட வரிசையில்
தொலைந்து போனேன் நான்

கால்களால் மார்பு மிதித்து
என்னை மிரட்டிய நம் குழந்தையை
பரிசாய் கோடுத்த போது உன்னில்
சரணடைந்தேன் நான்

என்னை வாழ்வில் வெற்றி கொண்டவனாய்
பார்கிறது உலகம் எனக்கு தெரியும்
அன்பே ,
என் ஒவ்வொரு வெற்றியிலும் நீ
ஒழிந்து கொண்டிருக்கிறாய்

உன்னை மிரட்சியுடன் பார்த்து
மணநாண் பூட்டிய மணநாளை
நினைக்கும் போது
“வெட்கமாய் இருக்கிறது” பெண்ணே!

சகியே,
கொண்டாடபோகும் சதாபிஷேகத்தின்
பரிசாய் எனக்கு ஒரு வரம் கொடு
அடுத்த ஜென்மத்தில் நான் நீயாய்
நீ நானாய்................................

Thursday, September 17, 2009

தனிமை

நினைவுகள் கூட தீர்ந்துவிட்டன
கனவுகள் கான நினைதேன்
பாலைவனங்களே வந்தன...

நனவுகள் தப்பி, கண்ணீர்
இதழ்களை எரித்த போது
சோகங்கள் பாறைகளாய்
மனதை அழுத்தியது

கால் தடுக்கிய போது
தாங்கிய சுவர்களிடம்
சொன்னேன் 'நன்றி' என்று
நான்கும் கூட்டமாய்
என்னை பார்த்து சிரித்தன

என் வீட்டு கண்ணாடிக்கு
கொஞ்சம் கோபம் தான்
என்னை மட்டுமே
பார்க்கவேண்டியுள்ளதே

T.V யும் ரேடியோவும்-என்
வீட்டு தோட்டமும்,என்
தனிமையில் பங்கு எடுக்கும்
அன்பு தோழிகள்

தோட்டத்து ரோஜாவை
அன்பளிப்பாய் கொடுக்க
முகங்களை தேடினேன்,மறைந்த
பாட்டிக்கு கொடுத்தேன்